குருவிக்கொண்டான்பட்டி
முன்பு குருவிக்கொண்டான்பட்டியில் வேளாளர்கள் வசித்து வந்தனர். அப்பொழுது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர் (குரு) இல்லை. அக்காலத்தில் நகரத்தார்கள் தங்களுக்காக ஒரு குருவைக் கொண்டு வந்ததால் இவ்வூர் குருவிக்கொண்டான்பட்டி என்று அழைக்கபட்டது.
மேலபத்தூர் வட்டகையைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது. புதுக்கோட்டையில் இருந்து குழிபிறை - இராங்கியம் வழியாக 33கி.மீ தொலைவில் உள்ளது. ஒன்பது நகரக்கோவில்களில் ஒன்றான இளையாத்தங்குடியில் இருந்து 6கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
10.02.2006 வரை குருவிக்கொண்டான்பட்டியில் பிள்ளையார்பட்டி - 55, மாத்துர் - 35, சூரக்குடி - 63, இளையாத்தங்குடி - 29, ஒக்கூர் - 23, வைரவன்கோவில் - 22, இரணிக்கோவில் - 72, இலப்பைகுடி - 03 ஆகிய 7 கோவில்களைச் சேர்ந்த 302 நகரத்தார் குடும்பத்தினர் (புள்ளிகள்) வாழ்ந்து வருகின்றனர்.
மீனாட்சி சொக்கலிங்கம் திருக்கோவில் நகரகச் சிவன்கோவிலாகும். இத்திருக்கோவில் நகரத்தார் பெருமக்களால் 1905ஆம் ஆண்டில் பாலாலயம் அமைத்து கல் திருப்பணியைத் தொடங்கி குடமுழுக்கு விழா 20.01.1932ல் நடைபெற்றது. மேலும் திரு.சிவ.கரு.முத்தையா செட்டியாரின் உபயமாக 18.06.1970ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்றைய தலைமுறையினரால் 02.09.1992 மற்றும் 10.02.2006ல் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலட்ச அர்ச்சனை நடத்துப்பட்டு வருகின்றது. தற்போது ஆண்டுதோறும் நகரத்தார் பிள்ளையார் நோம்பும் ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு வருகின்றது.
ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை நடைபெறும் சொக்கலிங்கம் மீனாட்சி வித்யாசாலை நகரத்தாரால் 1950ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது.
நகரத்தார் குடும்பத்தால் நன்கொடை அளிக்கப்பெற்ற அ.சொ.சொக்கலிங்கம் செட்டியார் அரசு மருத்துவமனை இவ்வூரில் தொண்டாற்றி வருகிறது.
ஊர்மக்களும் நகரத்தார்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து மற்ற ஊர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.
முக்கிய தொலைபேசி எண்கள் | சேவைகள் | புகைப்படங்கள் | கோவில்கள் | விழாக்கள் | படைப்பு வீடு